அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – காவிந்த ஜெயவர்தன

நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது,மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதை அறியாமல் ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சுக்களை விரிவுபடுத்த முயற்சிக்கிறார்.

நாட்டு மக்களின் தவறால் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை, மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு மக்கள் படும் துயரம் தெரியாது.ஆகவே அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை குறைத்தாவது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதளவும் கிடையாது.

தற்போதைய பொருளாதார பாதிப்பிற்கு இதுவரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புக் கூற வேண்டும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறு,ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லும் தீர்மானத்தை எடுக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எவ்வித தூரநோக்கமற்ற வகையில் இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனைக்கு தடை விதித்தார்.தமது விவசாய நடவடிக்கைக்கு தேவையான உரத்தை வழங்குமாறு விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடினார்கள்.

உரம் வழங்காவிடின் நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என விவசாயிகள் நாட்டு பற்றுடன் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்கள்.

ஆனால் விவசாயிகளின் கருத்துக்கு அப்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை.

உரம் பற்றாக்குறையால் முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டது.நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கேள்வி உயர்வடைந்ததை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தது,பண வீக்கம் துரிதமாக அதிகரித்தது.

இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலை நோக்கி செல்கிறது என தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த போதும்,அரசாங்கம் அது குறித்து அவதானம் செலுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டது.

தேவையான டொலர் கையிருப்பில் உள்ளது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என குறிப்பிட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சீனி வரிக்குறைப்பு,வெள்ளைப்பூண்டு இறக்குமதி,உரம் இறக்குமதி ஊடாக அரச நிதி மோசடி செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு செல்வந்த தரப்பினருக்கு வரிச் சலுகை வழங்கினார்,

இதனால் பல கோடி ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்தது,இவ்வாறான தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதே உண்மை.

பொருளாதார படுகொலையாளியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டு மக்களை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி ஓய்வூதியம் பெற்று சுகபோகமாக வாழ்கிறார்.

பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கி நாட்டு மக்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்,அரச காலத்தில் வழங்கப்பட்ட தண்டனையாவது வழங்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சார்பாக அமையவில்லை.

இந்த வரவு செலவுத் திட்டம் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டது என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

நாட்டு மக்களை அடிப்படையாகக் கொண்டே அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் நிச்சயம் நிவாரணம் வழங்க வேண்டும்,ஏனெனில் நாட்டு மக்களின் தவறால் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை.

யுத்தம் இல்லாத சூழ்நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,

ஆனால் சுகாதார அமைச்சுக்கு 322 பில்லியனும்,கல்வி அமைச்சுக்கு 232 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய சூழலில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ளவில்லை.

நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது,மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதை அரசாங்கம் இன்றும் அறியாமல் உள்ளது.

நாட்டு மக்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடும் ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சுக்களை அதிகரித்துக் கொள்ள அவதானம் செலுத்தியுள்ளார்.

அமைச்சரவையை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்தீரப்படுத்துவதை விடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்

(virakesari)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *