260 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கியது இந்தியா

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா பெறுமதியுடைய மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. 

இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பினால், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குறித்த மருந்து தொகை கையளிக்கப்பட்டுள்ளது.

இம்மனிதாபிமான உதவிப்பொருட்களை துரிதமாக விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமானதும் நேரடியாக தரையிறங்கல் வசதியுடையதுமான, 5600 தொன் நிறைகொண்ட கரியால் கப்பலானது சாகர் ஐ ஓ பணியின் ஓர் அங்கமாக சேவையில் அமர்த்தப்பட்டிருந்தது.

மருத்துவப்பொருட்களுக்கு மேலதிகமாக இலங்கை மீனவர்களின் பயன்பாட்டுக்காக மண்ணெய்யும் இக்கப்பல் மூலமாக தருவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்துவரும் நாட்களில் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் ஊடாக இந்த மண்ணெய் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் அமைப்புகள் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த மருத்துவ பொருட்தொகுதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த மார்ச் இலங்கைக்கு வருகைதந்திருந்தபோது சுவசெரிய மன்றத்தின் பிரதிநிதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்  கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் மருத்துவ தேவைகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இத்தேவைகள் தற்போது நன்கொடைமூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.  

இதற்கு மேலதிகமாக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

பேராதனை போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டுக்காக மற்றொரு பாரிய தொகுதி மருத்துவப்பொருட்கள் கடந்த ஏப்ரல் விநியோகிக்கப்பட்டிருந்தது.

நிதி உதவி, அந்நிய செலாவணி ஆதரவுகள், மூலப்பொருட்கள் வழங்கல், போன்ற பல்வேறு வடிவங்களிலான உதவிகளை இலங்கை மக்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த மனிதாபிமான உதவிப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின்  ‘அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு’ சான்று பகர்வதாக இம்முயற்சிகள் அமைகின்றன. 

இக்கொள்கை இரு நாடுகளின் மக்கள் இடையிலான ஈடுபாட்டை அதன் மையத்தில் கொண்டுள்ளது.  

இலங்கையில் உள்ள தமது சகோதர சகோதரிகளுக்காக இந்திய மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் உதவிகள் மூலமாக இவ்வாறான ஆதரவுகள் மேலும் வலுவடைகின்றன. 

இந்திய இலங்கை மக்களின் பரஸ்பர நல்வாழ்வுக்காக இருநாட்டு மக்களும் வழங்கும் முக்கியத்துவத்தினை இலங்கை மக்களுக்கான இவ்வாறான அர்ப்பணிப்புகள் உறுதிப்படுத்துவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *